அரபிக் கடலில் உருவாகியுள்ள லூபன் புயல் ஓமனில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அரபிக் கடலில் உருவாகியுள்ள லூபன் புயல் ஓமனில் கரையை கடக்கும். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஒடிசாவை நோக்கி செல்லும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர் மழை படிப்படியாக குறைந்துவிடும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அரபிக் கடல், வங்கக் கடலுக்கு அக்டோபர் 10 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாவே பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.