தமிழ்நாடு

லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவர் நியமனம்

webteam

லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை உறுப்பினராக கொண்ட இந்தக் குழு, 3 பேர் கொண்ட தேடுதல் ஆணையத்தை தேர்வு செய்யும். அந்த ஆணையம் 5 பேர் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து அறிக்கை அளிக்கும். அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் பங்கேற்று லோக் ஆயுக்தா தேர்வுக்குழு குறித்து ஆலோசித்தனர். விரைவில் தேடல்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தேடுதல் குழுவின் உறுப்பினராக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஏ.பாரியை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். தேர்வுக்குழுவில் ஆளுங்கட்சியினரே பெரும்பான்மை பெற்றுள்ளதால், மேலும் இருவரை குழுவில் இணைக்க ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.