தமிழ்நாடு

போலீஸ் போல் நடித்து சங்கிலி பறிக்கும் மஹாராஷ்டிர மாநில கொள்ளையர்கள்

போலீஸ் போல் நடித்து சங்கிலி பறிக்கும் மஹாராஷ்டிர மாநில கொள்ளையர்கள்

Rasus

சென்னையில் கடந்த 2 மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் தொடர்ச்சியாக தங்கச்சங்கிலிகளை பறித்து வருகிறார்கள்.

முகவரி கேட்பது போல நடித்து அவர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். மேலும், போலீஸ் போல் நடித்து, திருடர்கள் நடமாட்டம் உள்ளது எனவே, நகைகளை அணியக்கூடாது என்று எச்சரிக்கை செய்வது போல நகைகளை நூதனமான முறையில் அவர்கள் பறித்து வருகிறார்கள். வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. தோ‌ஷம் கழிப்பதற்கு நகைகளை வைத்து பூஜை செய்வதாக நாடகமாடி பெண்களிடம் நகையை பறித்துச் சென்றுவிடுகிறார்கள். கடந்த மாதம் மட்டும் இதுபோன்று நூதனமான முறையில் 10க்கும் மேற்பட்ட சங்கிலி பறிப்பு சம்பவங்கள் சென்னையில் அரங்கேறி உள்ளது. இந்த மாதமும் தொடர்ச்சியாக 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவர் நடத்திய விசாரணையில் சென்னையில் மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 6 கொள்ளையர்கள் முகாமிட்டு நகைகளை கொள்ளையடிப்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த இவர்கள் தற்போது மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கி உள்ளனர். இந்த கொள்ளையர்களில் ஒருவர் குறுந்தாடி வைத்துள்ளார். இன்னொரு கொள்ளையன் தலையில் நீலநிற தொப்பி அணிந்திருப்பார். இவர்களது 6 பேரின் படங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. நகைகளை பறிகொடுத்த பெண்களிடம் இந்த படங்களை காட்டியபோது, அவர்கள் தான் நகையை பறித்ததாக அடையாளம் காட்டினார்கள். இதனையடுத்து 6 பேரது படங்களும் போலீஸ் அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் 2 குழுக்களாக பிரிந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை பிடிக்க வாகன சோதனையும் நடக்கிறது. இவர்கள் தப்பி சென்றுவிடக்கூடாது என்பதற்காக விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளையர்கள் 6 பேரையும் இன்னும் ஓரிரு நாளில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.