அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி pt web
தமிழ்நாடு

கல்வித்துறையில் தரப்படும் நெருக்கடி? கேள்விக்குறியாகிறதா தமிழக மாணவர்கள் நலன்.. என்ன நடக்கிறது?

PT WEB

விடுவிக்கப்படாத நிதி

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதால், மாணாக்கர் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு தரப்படும் நெருக்கடி என அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தமிழக அரசு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக கூறுகிறது பாஜக...

சமக்ரா சிக்ஷா எனப்படும் பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நடப்பு நிதியாண்டில் 3ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசின் திட்ட ஒப்புதல் வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் 2ஆயிரத்து 152 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்காகவும், ஆயிரத்து 434 கோடி ரூபாய் மாநில அரசின் பங்காகவும் உள்ளது. ஆனால் தற்போது மத்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்கவேண்டிய 573 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கருக்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நெருக்கடி

இதற்கு தமிழ்நாட்டில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு தங்களுடைய கொள்கைகளை கல்வித்துறையில் திணித்து, மனித வளத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கண்டித்துள்ளார். மாணவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நிபந்தனையின்றி முதல் தவணை நிதியை வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிற்கான நிதியை போராடி பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நெருக்கடி அளிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

திட்டத்தை செயல்படுத்தாமல் நிதியை எப்படி பெற முடியும்

மேலும், திமுக மற்றும் தோழமை கட்சி எம்.பிக்கள் இந்த விவாகரம் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்தபோது, தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் அரை மணி நேரத்தில் நிதி விடுவிக்கப்படும் என அவர் கூறியதாகவும், அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார். ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

karu nagaraj

இதனிடையே, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன், பிஎம். ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தாமல், அத்திட்டத்திற்கான நிதியை எப்படி கோர முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் முதலமைச்சரோ, கல்வித்துறை அமைச்சரோ நேரடியாக டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனவும் கரு. நாகராஜன் கூறியுள்ளார்.

சமக்ரா சிக்ஷா திட்டமும், பிஎம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் வெவ்வேறானவை எனவும், இரண்டையும் தொடர்புப்படுத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், பிஎம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் அடிப்படையிலேயே சமக்ரா சிக்ஷா திட்ட நிதி விடுவிக்கப்படுவதாக கூறுகிறது பாஜக. மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் பாதிக்கப்படும் முன் இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமென்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது..