EB tower pt desk
தமிழ்நாடு

“நாட்டிலேயே நாள்தோறும் அதிக அளவிலான மின்சாரத்தை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு” - மத்திய அரசு தகவல்

நாட்டிலேயே நாளொன்றுக்கு சராசரியாக அதிக அளவிலான மின்சாரத்தை தமிழ்நாடு வழங்கி வருகிறது என மாநிலங்கவையில் மத்திய அரசு வழங்கியுள்ள புள்ளி விவரங்களில் தகவல்.

webteam

செய்தியாளர் - ராஜீவ்

நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் சமிக் பத்தாச்சாரியா எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்,

“தீன் தயாள் உபாத்தியா கரீம் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 18,374 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 2.86 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

TNEB

மேலும் பல்வேறு திட்டங்களின் படி நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டில் தேசிய அளவில் நகர்ப்புற பகுதிகளில் தினசரி 23.4 மணி நேரமும், கிராமப்புறங்களுக்கு 21.9 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டிலே அதிகபட்சமாக தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேர சராசரி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த மூன்று மாநிலங்களில் கிராமப்புறங்களில் சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கி மாநிலம் எதுவென பார்த்தால், அதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு 23.5 மணி நேரமும், தெலுங்கானாவில் 21.9 மணி நேரமும், தலைநகர் டெல்லியில் கிராமப்புறங்களுக்கு வழங்கப்பட்ட சராசரி நேரம் குறித்த தரவுகள் இல்லை என்பதும் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

TNEB

நாட்டிலே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த நிதியாண்டில் கிராமப்புறங்களுக்கு சராசரியாக 18.1 மணி நேர மின்சாரமும், நகர்ப்புறங்களில் 23.4 மணி நேரம் மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.