கட்டுமானப் பணிகளை முடிக்காததால் எண்ணூர் அனல்மின் நிலையத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை தற்போதைக்கு வழங்க முடியாது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பழைமையான அனல்மின் நிலையங்களில் ஒன்றான எண்ணூர் அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே இருக்கக்கூடிய நிலையத்திலேயே புதுப்பித்து புதிய அனல்மின் நிலையம் அமைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதற்கு, அனல்மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளில் 17 சதவிகிதம் வரைதான் பணி முடிந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனல்மின் நிலையம் பகுதியில் 33 சதவிகிதம் பசுமை அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அனல்மின் நிலையத்தை புதுப்பிப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்கவில்லை என்றும், கடல்நீர் பாதிப்பு குறித்து சரியான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடாத அம்சங்கள் குறித்த தகவல்களை முழுமையாக தராததால், இந்த அனுமதியின் மீது எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.