நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த கொரோனா சூழலை ஒன்றிய அரசு பயன்படுத்துவதாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டிருந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாணவர்களின் நலன் கருதியும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து டிவிட்டரில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார். அதில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல், 102 தேர்வு மட்டும் ரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை.
நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.