வேலைவாய்ப்பு  முகநூல்
தமிழ்நாடு

“அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்!” - மத்திய அரசு அறிக்கை

PT WEB

2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, மதிப்பு கூட்டுதலில், மகாராஷ்டிரா முதலிடத்தை பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன.

மிக முக்கியமாக அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நான்கு இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்த 5 மாநிலங்கள் மட்டும் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்பில் 55 சதவீத பங்களிப்பை வழங்கியிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் குஜராத், மகாராஷ்டிரா இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.