இரண்டாம் கட்ட மெட்ரோ pt web
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம்.. 65% நிதியை மத்திய அரசே வழங்கும் என விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு செலவில் 65 விழுக்காடு நிதியை, தாங்களே வழங்குவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

PT WEB

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மத்திய அரசும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போதும் நேரில் கோரிக்கை வைத்தார். இதன் தொடர்ச்சியாக 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மெட்ரோ ரயில்

இந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு வழங்க உள்ளன என்பது குறித்து, பல்வேறு கருத்துகள் பரவிவந்த நிலையில் மத்திய அரசு விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலின்படி மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்திற்கான மதிப்பீட்டு தொகையாக 63,246 கோடி ரூபாயில் ஏறத்தாழ 65 விழுக்காட்டை இப்போது மத்திய அரசு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியில் 33,593 கோடி ரூபாய் முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனாக 7,425 கோடி ரூபாயும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 35 விழுக்காடு மதிப்பீட்டு செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மற்றும் இருதரபு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடன்களாக கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்-க்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதற்கு முன் திட்டத்திற்கான கடன் ஏற்பாடு செய்வது மாநில அரசின் பொறுப்பாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால் இதர வளர்ச்சிப்பணிகளுக்கு 33,593 கோடி ரூபாய் அளவுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இனி திட்டத்தொகை, கடன் வழங்கும் முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும், மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தும் முகமையாக மாநில அரசு இருந்துவந்த நிலையில் இனி மத்திய வீட்டுவசதி நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முகமையாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்கும் என்றும் கடனை திருப்பிச் செலுத்தும் நிலையில் சிஎம்ஆர்எல் இல்லாத பட்சத்தில் அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.