MSME pt desk
தமிழ்நாடு

எஃகு மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு - கடும் அதிருப்தியில் தமிழக MSME துறையினர்!

எஃகு மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்ற மத்திய அமைச்சரின் கருத்துக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) கவலை தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தொகுப்பை பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: ஐஸ்வர்யா

ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு:

ஆட்டோ மொபைல், பொறியியல், கிரைண்டர், பம்ப் - செட், ஜவுளி என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டீல் மற்றும் ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயம் தமிழக எம்.எஸ்.எம்.இ துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே உள்ள விலையில் ஆர்டர்களை பெற்றுள்ள நிலையில், இந்த திடீர் வரி அதிகரிப்பு என்பது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், விலை குறைவால் ஏற்றுமதியில் ஏற்பட்டு வரும் நேர்மறையான மாற்றத்திலும் பாதிப்பை சந்திக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் எம்.எஸ்.எம்.இ., துறையினர்.

MSME

உற்பத்தியை காட்டிலும் நுகர்வு அதிகரிப்பு:

உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. எஃகு அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2023 ஆம் நிதியாண்டில் 125.32 மில்லியன் டன்கள் கச்சா எஃகு மற்றும் 121.29 மில்லியன் டன்கள் நிறைவு செய்யப்பட்ட எஃகு உற்பத்தியாகி இருந்தது. அதுவே 2024 ஆம் ஆண்டில் கச்சா எஃகு 143.6 களாகவும் மற்றும் முடிக்கப்பட்ட எஃகு உற்பத்தி 138.5 மில்லியன் டன்களாக உள்ளது. உற்பத்தியை காட்டிலும் நுகர்வு அதிகரிப்பு என்பது தொழில் துறையின் முக்கியத்துவத்தை காணலாம்.

தனிநபர் எஃகு நுகர்வு 2030-ல் 160 கிலோவாக உயரும்:

FY23 இல், முடிக்கப்பட்ட எஃகு ஏற்றுமதி 6.7 MT மில்லியன் டன்களாகவும் மற்றும் இறக்குமதி 6.02 MT ஆக உள்ள நிலையில், FY 24 இல், முடிக்கப்பட்ட எஃகு ஏற்றுமதி 7.49 ஆவு ஆகவும் மற்றும் இறக்குமதி 8.32 MT ஆகவும் 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இறக்குமதி உயர்ந்திருப்பதை காணலாம். கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி 75 சதவீதம் அதிகரித்துள்ள அதே நேரத்தில், உள்நாட்டு எஃகு தேவை கிட்டத்தட்ட 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தனிநபர் எஃகு நுகர்வு 2023 நிதியாண்டில் 86.7 கிலோவாக இருக்கும் நிலையில், 2030 இந்த எண்ணிக்கை 160 கிலோவாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

MSME

மூலப் பொருட்களின் விலை 200 சதவீதம் வரை உயர்ந்ததால் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன:

கொரோனாவால் தத்தளித்து வந்த எம்.எஸ்.எம்.இ ., துறையினர், 2021 ஆம் ஆண்டு ஸ்டீல், காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் என எம்.எஸ்.எம்.இ., க்கு தேவையான அடிப்படையான சுமார் 13 மூலப் பொருட்களின் விலை 200 சதவீதம் வரை உயர்ந்ததால் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியது. இதையடுத்து 15 சதவீதமாக இருந்த ஸ்டீல் மூலப் பொருட்களின் இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

உள்நாட்டு எஃகு தொழில் முனைவோரை பாதுகாக்க வேண்டும்:

இந்நிலையில், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் எஃகு மூலப் பொருள்கள் கிடைப்பதால் பாதிக்கப்படும் உள்நாட்டு எஃகு தொழில் முனைவோரை பாதுகாக்கும் வகையில் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு என்ற முடிவு, இந்தியாவின் பெரு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என எம்.எஸ்.எம்.இ., துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற முடிவுகள் எடுக்கும்போது உற்பத்தியாளர்களை மட்டுமின்றி எம்.எஸ்.எம்.இ., துறையினரையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

cotton mill

ஆண்டு தோறும் மூலப் பொருட்கள் விலையின் நிலையற்ற தன்மையால் தொழில் பாதிப்புகளை சந்திக்கும் எம்.எஸ்.எம்.இ., துறையினரின் இந்த பிரச்னைக்கு, எஃகு மூலப் பொருளுக்கு அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை கண்காணிப்புக் குழுவில் எம்.எஸ்.எம்.இ துறையினரை சேர்க்க வேண்டும் என்பதே தீர்வாக அமையும்.