செய்தியாளர்கள் - ராஜன் மற்றும் சுந்தரமகேஷ்
--------
வெள்ளம் வடிந்த போதும் வடியாத துயராக உருவெடுத்திருக்கின்றன பாதிப்புகள். தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக வந்த 6 பேர் கொண்ட மத்திய குழு, தூத்துக்குடியில் முதற்கட்ட ஆய்வைத் தொடங்கியது.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய குழுவினர், ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை படகில் சென்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே வெள்ள பாதிப்புகள் 5 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என தெரிவித்த நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர், மத்தியnகுழு நடத்தக்கூடிய இரண்டு நாள் ஆய்வில் விவசாய நிலங்கள், மீனவ படகுகளின் சேதாரம் மற்றும் உயிர்பலி ஆகியவற்றின் சேதாரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை துறை சார் அலுவலர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். அரசின் வெள்ள சேத கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.