திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்மா கூட்டு சாலை அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அவரை சோதனை செய்ததில் அவரிடம் இருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சேனந்தல் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரிடம் கத்தி முனையில் 2500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், விசாரணையின்போது, வந்தவாசி, அனக்காவூர், படாளம், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பூபாலன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பூபாலனை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த கத்தி, 2, 500 ரூபாய் பணம், மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.