தமிழ்நாடு

முகவரி கேட்பது போல் முதியவரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி காட்சிகள்

webteam

சென்னையில் முகவரி கேட்பது போல முதியவரிடம் இரு இளைஞர்கள் செல்போனை பறித்துச்சென்றனர்.

சென்னை நெற்குன்றம் பகுதியைச்சேர்ந்த 66 வயது வியாபாரி ஜெயபாண்டியன். இவர் தனது இருசக்கர வாகனம் மூலம் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று வளசரவாக்கத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வெல்லத்தை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் முகவரி கேட்டனர். 

இளைஞர்கள் கூறிய முகவரியை கேட்டு, ஜெயபாண்டியன் வழியைக் கூறிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞர், வியாபாரியின் சட்டைப்பையில் இருந்த செல்போனை சட்டென கையில் எடுத்தார். உடனே இருசக்கர வாகனத்தின் முன்புறம் உட்காந்திருந்த இளைஞர் வண்டியை இயக்கினார்.

தன்னிடம் இருந்த செல்போன் எடுக்கப்பட்டதை உணர்ந்த வியாபாரி, அந்த இளைஞர்களை பாய்ந்து பிடிக்கப்பார்த்தார். ஆனால் அவரால் அவர்களை பிடிக்கமுடியவில்லை. வண்டியின் பின்புறம் இருந்த கம்பியை பிடித்த அவர், வண்டியை நிறுத்த முயன்றார். அப்போது வண்டியை நிறுத்ததாமல், அந்தத் திருடர்கள் வேகமாக வண்டியை செலுத்தி, முதியவரான வியாபாரியை ரோட்டில் இழுத்துச்சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் படுகாயமடைந்த வியாபாரி சாலையில் விழுந்தார். இதையடுத்து செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் வியாபாரி புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், அதில் திருட்டு சம்பவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அதைக்கொண்டு காவல்துறையினர் திருடர்களை தேடி வருகின்றனர்.