ஆம்ஸ்ட்ராங் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எப்படி? காவல்துறை வெளியிட்ட சிசிடிவி காட்சி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கடந்த 5 ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் மர்ம கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த கொலை தொடர்பாக கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், திமுக வழக்கறிஞர் அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான 2 சிசிடிவி காட்சிகள் சம்பவம் நடந்த தினத்தன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆனால், இதில் கைது செய்யப்பட்ட 11 பேரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள், நண்பர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக-வின் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலதரப்பினரும் தங்களின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே இக்கொலையில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் இன்று காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்பதை உறுதிபடுத்தும் நோக்கில், இதுதொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், கொலையாளிகள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? கொலை நடந்தேறியது எப்படி? ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், சந்தோஷ் என்பவர் டெலிவரி உடை அணிந்து வருவதும், அங்கு திமுக வழக்கறிஞர் அருள் ஆலோசனை மேற்கொண்டு வருவதும், என்கவுன்ட்டரில் இன்று காலை படுகொலை செய்யப்பட்ட திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்ததும் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சியை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.