தமிழ்நாடு

மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விபத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது!

ச. முத்துகிருஷ்ணன்

மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

தாம்பரம் செல்வதற்காக சென்னை கடற்கரை பணிமனையிலிருந்து ஒரு மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நிறுத்துமிடத்தின் அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது, ரயில் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரயிலில் இருந்து குதித்து ஓட்டுநர் சங்கர் உயிர்தப்பினார். அதேநேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த ரயில், தடுப்பையும் மீறி, நடைமீது ஏறி நின்றது.

இந்த விபத்தில் என்ஜினுடன் இணைந்த முதல் பெட்டியின் முன்பகுதி சேதமடைந்தது. பிற்பகல் நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், பணிமனையிலிருந்து வந்த நிலையில், ரயிலில் பயணிகள் இல்லாததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்து குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணிமனையில் இருந்து ரயில் மெதுவாகத்தான் வந்ததாகவும் நடைமேடையில் நின்றவர்களைப் பார்த்து விலகிச் செல்லுமாறு ஓட்டுநர் கையசைத்தாகவும் விபத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நடைமேடையில் ரயில் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. ரயில் மோதி புழுதி கிளம்பி, பயணிகள் பதறிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.