சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டில் குற்றங்கள் குறைந்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் சென்னை காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். 2018ஆம் ஆண்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதன் முழுப் பயனும் 2019ஆம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டில் 615 செயின் பறிப்பு வழக்குகள் பதிவானதாக தெரிவித்த காவல் ஆணையர், கடந்த ஆண்டு அது 307ஆக குறைந்தாக கூறினார். மேலும், பல்வேறு மோசடி கும்பல்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குவதாக குறிப்பிட்ட காவல் ஆணையர், பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலியை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் அவர் விளக்கமளித்தார்.
நிர்பயா நிதியின் கீழ் 113 கோடி செலவில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படவுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.