தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை: முதல்வர்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை: முதல்வர்

jagadeesh

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நாளை பதவியேற்கவுள்ளார். இதனிடையே, இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்ற அனுமதிபெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.