தமிழ்நாடு

நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

webteam

நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அகில இந்திய மாதர் சங்கம் பொதுச்செயலாளர் சுகந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியை காவல்துறையினர் 2018 ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜ் பல்கலைக் கழக  பேராசிரியர் முருகன், மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் சம்மந்தபட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை. நிர்மலா தேவி யாருக்காக இதை செய்தார் எனவும் கண்டுபிடிக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி அறிக்கையையும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கவும் கீழ் நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் நீதிமன்றம் தலையிடவேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கீழ் நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.