செய்தியாளர்: மணிகண்டபிரபு
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் “ராமதாதபுரம் மாவட்டம், கீழநாகாச்சி தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் நிறுவனம் அமைக்க எனக்கு கடந்த 2000ம் ஆண்டில் 2 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. முன்பணம் போக மீதி தொகையை எட்டு மாத தவணைகளில் செலுத்த கூறினர்.
ஆனால், தவணையை முறையாக செலுத்தவில்லை எனக்கூறி எனக்கான ஒதுக்கீடு 2004ல் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் உத்தரவுபடி ரூ.11.25 லட்சத்தை ஒரே தவணையில் செலுத்த கூறியுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார். அந்த வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி விசாரித்து தள்ளுபடி செய்தார்.
நீதிபதி புகழேந்தி அளித்த உத்தரவில், “மனுதாரர் தன்னை உயர்நீதிமன்ற நீதிபதி என அதிகாரிகளுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அவர் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதாகக் கூறி, அதற்கான உத்தரவையும் இங்கு காட்டினார். அதைப் பார்க்கும் போது அவர், நீதிபதி என்பது உண்மை என தோன்றுகிறது. ஆனால், நியமன அறிவிப்பாணையை படித்துப் பார்த்தால் சந்தேகம் வருகிறது.
தற்போது நீதிபதி எனக் கூறுபவர், 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியதாக சான்றிதழ் கொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த நீதிபதி நியமன அறிவிப்பாணை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மதுரை சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதன்பேரில் மனுதாரர் தாக்கல் செய்த நீதிபதி நியமன அறிவிப்பாணையின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வேண்டும். அறிவிப்பாணை முறைகேடானது என தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் பாண்டியன், உயர்நீதிமன்ற நீதிபதியா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில், அவர் வி.ரவிச்சந்திரன் பான்டியன் என்ற பாண்டியன் என்பதும், ஐகோர்ட்டு நீதிபதி என்பது பொய்யான தகவல் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பாண்டியனை சி.பி.ஐ. போலீசார் கைது செய்துள்ளனர்.