தமிழ்நாடு

`குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து...’ சிபிசிஐடி தகவல்

`குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து...’ சிபிசிஐடி தகவல்

webteam

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 92 நபர்களில் 8 பேரை மட்டும் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்திற்கு மீண்டும் வரவழைத்து அவர்களிம் சிபிசிஐ டி போலீசார் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இருபது நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை கண்டறிய முடியாததால் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பிறகு திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 23வது நாளாக நேற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், முத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 3 சமூக மக்கள் 92 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதில் 8 பேரை நேற்று திருச்சி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து சிபிசிடி போலீசார் விசாரணை  மேற்கொண்டனர். காலை 11 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரையில் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கான விளக்கத்தை வீடியோ ஆதாரங்களுடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து இன்று காலை ஏற்கெனவே விசாரணைக்கு உட்படுத்தாத புதிய நபர்கள் சிலரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கையில், “தற்போது அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த மூன்று சமூக மக்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதால், சம்மன் அளித்து விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை. ஏற்கனவே விசாரித்த 92 நபர்களில் குறிப்பிட்ட 8 பேரிடம் மட்டும் இன்று கூடுதல் விசாரணை மேற்கொண்டுள்ளோம். நாளையும் புதிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதால் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.