செய்தியாளர்: ஐஷ்வர்யா
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பறிமுதல் செய்த பணம் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் என சொல்லப்பட்ட நிலையில், அது பாஜகவின் பணம் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட 3 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், கோவை கணபதி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சேகர் இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக நேற்று விசாரிக்க வேண்டுமென சி.பி.சி.ஐ.டி சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க இருப்பதால், பத்து நாட்கள் அவகாசம் தேவை என சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்று நான் வெளியூருக்கு கிளம்பிக் கொண்டு இருந்த போது திடீரென வந்து, நோட்டீஸ் கொடுக்காமல் விசாரிக்க முயன்றனர். அவர்களை வரவேற்று அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, காவல்துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதற்கான உத்தரவு நாளை வந்துவிடும். அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பா.ஜ.க மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. நான்கு கோடி ரூபாய் பணத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை" என்பதை சொல்லிவிட்டோம்.
தி.மு.க அரசு பா.ஜ.க-வை களங்கப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. அது மிகப்பெரிய அளவில் தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும் என்று எஸ்ஆர்.சேகர் தெரிவித்தார்.