காணாமல் போன காலகட்டத்தில் எங்கிருந்தார் என்ற தகவலை சொல்ல முகிலன் மறுத்துவிட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிசிஐடி விரிவான பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் திருப்பதி ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மன்னார்குடி ரயில் முன்பு உள்ள ரயில் பாதையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாதுகாப்பு படை பிரிவினர் அவரை மீட்டு பாதுகாப்புப் படை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின் அவரிடம் விசாரித்தபோது தகவல்களை முதலில் சொல்ல மறுத்தவர் பின்னர் தான் முகிலன் எனவும் வீட்டு முகவரியையும் கூறியுள்ளார். தொடர்ந்து காட்பாடி செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அதனால் மாலை காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிபிசிஐடி திருப்பதி ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் தமிழகத்தில் சிபிசிஐடியால் தேடப்பட்டு வரும் முகிலன் என்பது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் விரைந்த சிபிசிஐடி போலீசார் முகிலனை மீட்டு சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
மேலும் காணாமல் போன காலகட்டத்தில் முகிலன் எங்கிருந்தார் என்பது போன்ற விவரங்களை அவர் சொல்ல மறுத்துவிட்டார். பாலியல் வன்கொடுமை செய்ததாக கரூரில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முகிலன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.