Madurai High court Representational Image
தமிழ்நாடு

“ரூ.6,000 விவசாய மானியம் பெற ஆதார் கட்டாயம்; ஆனா, நீட் தேர்வுக்கு இல்லையா?” - நீதிபதி சரமாரி கேள்வி

சாதாரண விவசாயி மானியத்தை பெற ஆதார் அட்டையை கட்டாய என்கிறீர்கள். ஆனால், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு அது கட்டாயமில்லை என்கிறீர்கள் என மதுரை அமர்வு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையின் போது பல்வேறு மாணவர்கள் இதுபோல ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தருண் மோகன் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

neet exam results

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு சிபிசிஐடி தரப்பில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இதுவரை சிறப்புக் குழு அமைக்கவில்லை. 2019ல் வழக்கு பதியப்பட்ட நிலையில், விசாரணையில் தொய்வு ஏற்படுவது ஏற்கத்தக்கதல்ல. சிபிசிஐடி வழக்கை முறையாக விசாரிப்பதாக தெரியவில்லை. இந்நிலை தொடர்ந்தால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, சிபிசிஐடி கோரிய ஆவணங்களை தேர்வு முகமை வழங்கி விட்டதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டன. என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ஆதார் தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டுவிட்டதா? அதனை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாமே? என கேள்வி எழுப்பினார். அதற்கு தேசிய தேர்வு முகமை தரப்பில், "உச்சநீதிமன்றம் ஆதார் அட்டையை எதற்கும் கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆகவே, தேர்வெழுத ஆதார் அட்டையை கட்டாய அடையாள அட்டையாக குறிப்பிடவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

CBI

அதற்கு நீதிபதி, "அப்படியென்றால், ஆதார் அட்டையை நீங்கள் எதற்கும் கட்டாயமாக்கவில்லையா? உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மட்டும் அமல்படுத்தினீர்களா? அப்படியென்றால் மாணவர்களின் அடையாளத்தை எதனடிப்படையில் உறுதி செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு, "2021ல் அதற்கான தொழில்நுட்பம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின்றி தரவுகளை தர இயலாது என்கின்றனர்" என தெரிவித்தனர். தேசிய தேர்வு முகமை தரப்பில், "மாணவரின் புகைப்படம் எடுக்கப்பட்டது. மாணவரின் கைரேகை வைத்து மாணவர்களை அடையாளப்படுத்தினோம்" என தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதி, "சாதாரண விவசாயி தனது 6 ஆயிரம் மானியத்தைப் பெற ஆதார் அட்டையை கட்டாயமென்கிறீர்கள். ஆனால், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு அது கட்டாயமில்லை என்கிறீர்கள். சிபிசிஐடி இந்த வழக்கை திறனற்று விசாரிக்கிறது. இதனை தேசிய தேர்வு முகமையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது" என தெரிவித்தார். சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.