கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரும், தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம், தாம்பரம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான வழக்கை தாம்பரம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு இருமுறை சம்மன் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் தன்மை கருதி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு கடந்த 26ஆம் தேதி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து பறிமுதல் செய்த நான்கு செல்போன்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி சசிதரனிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக சிபிசிஐடி போலீசார், தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் சம்மன் அளித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், தொடர்ந்து நயினார் நாகேந்திரனிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை தடயவியல் துறையிடம் ஒப்படைத்து யார் யாருடன் இந்த நபர்கள் தொடர்பு கொண்டனர் என்ற விவரங்களையும் சிபிசிஐடி போலீசார் திரட்ட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.