கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், “கொலை குற்றத்திற்காக எனது மகன் சிவக்குமார் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர்.
காவல் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர். இதில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறை கைதியை சட்டவிரோதமாக வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மீது விசாரணை நடத்த காவல்துறை இயக்குநர் உத்தரவிட வேண்டும்.
அதுபோல், பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சிவக்குமாரை வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு உடனடியாக மாற்றவும்” என காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலக்ஷ்மி மற்றும் தொடர்புடைய சிறை அதிகாரிகள் என 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக சிறைத்துறை துறை ரீதியான விசாரணையும் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறைத்துறை டிஐஜி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நேரடியாக வேலூர் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.