தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: சில விவரங்களை திரட்ட யூடியூப்க்கு சிபிசிஐடி மின்னஞ்சல்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: சில விவரங்களை திரட்ட யூடியூப்க்கு சிபிசிஐடி மின்னஞ்சல்

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக வெளியான ஆடியோ தொடர்பாக  யூ டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி  மின்னஞ்சல் மூலம் சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி விசாரணையை தொடங்கி சிபிசிஐடி காவல்துறையினர், ஏராளமான தகவல்களைத் திரட்டி வருகின்றனர். 

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. அது தங்களின் விசாரணைக்கு தடங்களை ஏற்படுத்துவதாக அமையும் என சிபிசிஐடி அதிகாரிகள் அதனை நீக்கக்கோரி பேஸ்புக், வாட்ஸ் அப், யுடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அதற்கு பதிலளித்துள்ள யூ டியூப் நிறுவனம், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பான 90% வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்ஃபிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் பேசும் ஒரு பெண், ''திருநாவுக்கரசு வீட்டுக்கு பின்னால் ஒரு பெண்ணை கொலை செய்து புதைத்துள்ளனர்'' என்று கூறுவதுபோல் இருக்கிறது. அந்த ஆடியோவை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள சிபிசிஐடி, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

இது குறித்து யூ டியூப் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதில் அந்த ஆடியோவை யாரால் பதிவேற்றப்பட்டது. அதனை பதிவேற்றியவரின் தகவல்கள் என்ன என்பன உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளது. ஆடியோ குறித்த தகவல்கள் பெறப்பட்டதும் விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.