காவிரி விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் நடைப்பெற்ற போராட்டத்தின்போது, விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்ற வளாகத்தினுள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு நீதியை நிலைநாட்ட வேண்டும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி விவசாயிகள் போராடினர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர், அங்கிருந்த மரத்தின் மீதேறி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். அவர் இறங்க மறுத்ததால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, அந்த விவசாயி கீழே இறக்கப்பட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் காவலில் அழைத்து சென்றனர்.