தமிழ்நாடு

மாட்டுப் பொங்கல்: சத்தியமங்கலத்தில் களைகட்டிய கால்நடை அலங்கார கயிறுகள் விற்பனை

மாட்டுப் பொங்கல்: சத்தியமங்கலத்தில் களைகட்டிய கால்நடை அலங்கார கயிறுகள் விற்பனை

webteam

சத்தியமங்கலத்தில் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளுக்கு கட்டப்படும் அலங்கார கயிறுகள் மற்றும் சலங்கை விற்பனை களை கட்டியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும் ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்து அவற்றின் கழுத்தில் புதிய கயிறுகள் மற்றும் மணிகள் கட்டுவது வழக்கம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கால்நடை அலங்கார கயிறுகள் கடைகள் அதிகளவில் போடப்பட்டிருந்தது. குறிப்பாக இன்று அதிகளவில் அலங்கார கயிறுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டூர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் தயார் செய்யப்பட்ட அலங்கார கயிறுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து கால்நடைகளுக்கு புதிய கயிறுகள் வாங்க விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக அலங்கார கயிறுகள் விற்பனை களை கட்டியது. தலைக்கயிறு ஒரு ஜோடி ரூ.80-க்கும், கழுத்துக்கயிறு ரூ.30-க்கும், மூக்கணாங்கயிறு ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் தாம்புக்கயிறு ரூ.20, கொம்புக் கயிறு ரூ.20 சங்கு கயிறு ரூ.40க்கும் விற்கப்பட்டது. இதுதவிர ஆடு, மாடுகளுக்கு பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட திருகாணி, ஆட்டு மணி, வளையல் மற்றும் சலங்கை என கால்நடைகளுக்கு தேவையான அனைத்தும் அலங்காரப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையான இன்று புதிய கயிறுகளை வாங்க விவசாயிகள் அதிகளவில் வந்தனர், இதனால் வியாபாரம் நன்றாக இருந்ததாக கயிறு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.