தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
நுங்கம்பாக்கம், சென்னை என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களால் கடந்த 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்த நடிகர் விஷால் அணியினரின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு விஷால் தலைமையில் ஓர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்கியது. எனினும், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தை நாடினர். இதேபோல தேர்தல் நடத்தும் இடத்தை மாற்றுமாறும் வழக்குத் தொடரப்பட்டது.தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு, தேர்தலை நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதித்தது.
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்காத நிலையில், மிகுந்த பரபரப்புக்கு இடையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டன. இந்நிலையில் அண்மையில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி அளித்தது. இதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. நுங்கம்பாக்கம் நல் ஆயன் பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார் போன்ற ஆளுமைகள் தலைமை வகித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை யார் வழிநடத்தப் போகிறார் என்பது தெரிந்துவிடும்.