தமிழ்நாடு

காஞ்சிபுரம்: தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் பயனாளிகளின் சாதி பெயரும் டோக்கன்!

rajakannan

தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் பயனாளிகளின் சாதி பெயரும் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டது சர்ச்சையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் படித்த பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் மூலம் உதவித்தொகையும் தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது. பெண்களின் படிப்பிற்கு ஏற்ப இந்த உதவித்தொகை தரப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறையில் விண்ணப்பித்த 1331 பயனாளிகளுக்கு உதவித்தொகையும் தாலிக்கு தங்கமும் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடப்பு நிதியாண்டில் 1331 பெண் பயனாளிகளுக்கு, 5.11 கோடி ரூபாயில் திருமண உதவித்தொகையும், 5.24 கோடி ரூபாயில் தாலிக்கு தங்கமாக, 8 கிராம் தங்க நாணயங்களை அமைச்சர்கள் பெஞ்சமின் வழங்கினார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் ஒவ்வொருவரிடமும் தங்கத்திற்கான டோக்கன் வழங்கும்போது பல்வேறு ஒன்றியங்களில் இருந்து வந்த பயனாளிகளுக்கு அவர்களின் ஜாதி அடிப்படையில் பெயர் குறியீடு எழுதப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டது அரசு விழாவில் பயனாளிகள் இடையே ஜாதி பாகுபாட்டினை ஏற்படுத்தி பயனாளிகளின் சாதி பெயரும் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டது சர்ச்சையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் படிப்பிற்கு ஏற்ப இந்த உதவித்தொகை அரசால் வழங்கப்படும் நிலையில், இது ஜாதி பாகுபாட்டினை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறும்பொழுது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு டோக்கன்களில் எண்கள் மட்டுமேதான் குறிப்பிட்டிருக்க வேண்டும், எதனால் ஜாதி அடிப்படையில் அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டது என விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/rvNAEab_z3k" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>