மக்களவை தேர்தல் 2024 முகநூல்
தமிழ்நாடு

திருமங்கலம் to ஆர்கே நகர்.. தேர்தல் காலத்தில் பணம் கொடுக்க பெயர்போன பார்முலாக்கள்! டாப் லிஸ்ட் இதோ!

2002 சைதாபேட்டை பார்முலா, திருமங்கலம் பார்முலா, 2017 ஆர்கே நகர் பார்முலா, ஈரோடு கிழக்கு பட்டி பார்முலா என பல்வேறு விதங்களில் தேர்தல் காலத்தில் பணம் கொடுக்கும் பார்முலாக்கள் கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தன.

PT WEB

செய்தியாளர்: சுகன்யா

2002 சைதாபேட்டை பார்முலா, திருமங்கலம் பார்முலா, 2017 ஆர்கே நகர் பார்முலா, ஈரோடு கிழக்கு பட்டி பார்முலா என பல்வேறு விதங்களில் தேர்தல் காலத்தில் பணம் கொடுக்கும் பார்முலாக்கள் கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தன.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த பார்முலாக்களை திரும்பப் பார்க்கலாம்.

ஆர்.கே.நகர் டோக்கன் ஃபார்முலா

இதுதான் ஆர்.கே.நகர் டோக்கன் ஃபார்முலா. 2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் சார்பில் பொதுமக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாகவும், அந்த ரூபாய் தாளில் இருக்கும் சீரியல் எண்ணை தெரிவித்து வாக்குக்கு பணம் பெறலாம் எனவும் புகார்கள் எழுந்தன.

மிரளவைத்த மதுரை திருமங்கலம் ஃபார்முலா!

ஆனால், இதற்கு முன்னதாகவே பரபரப்பாக பேசப்பட்டது திருமங்கலம் ஃபார்முலாதான். 2009ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பணம் கொடுப்பதற்காக கட்சி சார்பில் ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்குத் தினமும் சாப்பாடுடன் சம்பளம் வழங்கப்பட்டது. அவர்களைக் கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள். வெளியூரில் வேலை செய்பவர்களைக் கூட கணக்கெடுத்து பணத்தை சரியாக கொடுத்துவிட்டு அவர்கள் சொந்த ஊருக்குச்சென்று வாக்களிப்பதை உறுதி செய்ததுதான் அந்த ஃபார்முலா.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பட்டி ஃபார்முலா

இதேபோல், கடந்த ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில், பட்டி ஃபார்முலா பெரியளவில் பேசப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணிமனை அமைத்து வாக்காளார்களுக்கு பணம் மற்றும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களது பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் காண்பிக்கப்படும். பிற கட்சிகளின் பரப்புரைகளுக்கு மக்கள் செல்வதை தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகாரில் 2019 ஆம் ஆண்டு கரூர் அரவக்குறிச்சி மற்றும் வேலூர் தொகுதிகளில் தேர்தலே நிறுத்தப்பட்டு மறு தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலிலும், பரப்புரைகளுக்கு கூட்டத்தை கூட்ட வாக்காளர்களுக்கு பணம், மது போன்றவை வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஃபார்முலாக்கள் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் காலம் மாறிவிட்டதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன். மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரில், “30 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் இந்தியாவில் வறுமை ஒழிந்தால்தான் வாக்குக்கு பணம் கொடுப்பது மாறும்.”

இதுஒருபுறம் இருக்க, ”ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விவகாரத்தில், தேர்தலை ரத்து செய்யக் கூடிய அளவிற்கு வானளாவிய அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.” என தெரிவிக்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

வாக்குக்குப் பணம் அல்லது பரிசுப்பொருள் கொடுக்கும் பழக்கம் தமிழகத்திற்கு புதிதில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நடந்த தேர்தல் தொடங்கி சுதந்திரம் பெற்றபிறகு நடந்த தேர்தல்களிலும் பணப்பட்டுவாடா முறைகேடு புகார்கள் எழுந்திருக்கின்றன. எந்தத் தேர்தலாக இருந்தாலும் இதுபோன்ற முறைகேடுகள் களையப்பட்டு நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படவேண்டும்.