தமிழ்நாடு

கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்க கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்க கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

Sinekadhara

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவகுண்டம் பகுதிகளில் கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்கக் கோரிய வழக்கில் கனிமவளத்துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசுப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், நெல்லை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், தமிழக சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் இயக்குனர் சந்திப் நந்தூரி உள்ளிட்டோர் இணைந்து சட்டவிரோதமாக கிராவல் மண், செம்மண் உள்ளிட்டவைகளை எடுத்தாக குறிப்பிட்டுள்ளார். திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் தாலுகாகளிலிருந்தும் 2018 ஆம் ஆண்டு முதல் இதுபோல மணல் கொள்ளை நடைபெற்றுள்ளதால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட மற்றும் உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் புகார் தொடர்பாக ஆய்வு செய்ததில், சாட்சியங்கள் எதுவுமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலாளர், கனிமவளத்துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.