மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்குகளை சரி பார்க்கும் VVPAT இயந்திரங்கள் இணைக்கப்பட்டன. ஒரு தொகுதியில் ஐந்து ஓட்டுச்சாவடிகளில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, ஒப்புகைச் சீட்டுக்கள் எண்ணப்பட்டன. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிடக் கோரி சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.பாக்கியராஜ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், 541 தொகுதிகளில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட, அதிக வாக்குகள் எண்ணப்பட்டன. அதேபோல 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட முடிவுகளில் குறைந்த வாக்குகள் எண்ணப்பட்டன எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள இந்த குறைபாடுகள் காரணமாக, எதிர்வரும் மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டுக்கள் எண்ணப்படும் என எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதே கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுசம்பந்தமான விவரங்களை சமர்ப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.