தமிழ்நாடு

வாக்காளர்களிடம் ஆபாச பேச்சு; அமைச்சர் பெஞ்சமின் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

வாக்காளர்களிடம் ஆபாச பேச்சு; அமைச்சர் பெஞ்சமின் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

sharpana

மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பெஞ்சமின் மீது இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அமைச்சர் பெஞ்சமின் கொடுத்த புகாரின் பேரில் திமுகவினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை அவதூறாக பேசியதுடன் அமைதியை சீர்குலைக்க முயன்றதாக திமுக பிரமுகர் நவராஜ் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் பெஞ்சமின் மீது இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் பென்ஜமின் கொடுத்த புகாரில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பென்ஜமின் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், "மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சம்மந்தமாக ஆய்வு செய்ய சென்றேன். சென்னை முகப்பேர் கிழக்கு. வீரமாமுனிவர் தெரு, எம்.ஜி.ஆர் ஆதர்ஷ் பள்ளி அருகில் பெண்கள் வாக்களிக்க வருவதை தடுக்கும் நோக்கத்துடன் தி.மு.க.வினர் பெண்களிடம் பாலியல் தொல்லை செய்தும், பல அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதை பார்த்த நான் அது சம்பந்தமாக அங்கு இருந்த மதுரவாயல் திமுக வடக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் நவராஜ் நவராஜ், நவசுந்தரம் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்வர்களிடம் கேட்டேன்.

அப்போது அவர்கள் என்னை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியதோடு மட்டுமல்லாமல் என்னுடைய வெற்றியை தடுக்கும் பொருட்டு எந்த செயலும் செய்வோம் என்றும் மிரட்டினார்கள். என்னுடைய காரையும் வழிமறித்து என்னை தாக்கவும் முற்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக ஜெஜெ நகர் போலீசார் மதுரவாயல் திமுக வடக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் நவராஜ், திமுகவைச் சேர்ந்த நவசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 143- சட்டவிரோதமாக கூட்டத்தை சேர்த்தல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.