சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளுடன் இன்று முதல் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதியிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது. குறைந்த அளவிலான வழக்குகள் மட்டும் காணொலி முறையில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வழக்கமான நடைமுறைகளுக்கு மாற திட்டமிட்டுள்ள உயர் நீதிமன்றம் அதற்கு முன்னோட்டமாக இரு நீதிபதி அமர்வுகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இன்று முதல் விசாரணை நடத்த அனுமதித்துள்ளது.
இதையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நேரடி விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள் கருப்பு மேலங்கி அணிய தேவையில்லை என்றும் வெள்ளை நிற சட்டை மற்றும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி, முகக் கவசம், வெப்ப பரிசோதனை உள்ளிட்டவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இருமல், சளி, காய்ச்சல் உள்ளோர் நீதிமன்றத்திற்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் இன்று முதல் நேரடி விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது