தமிழ்நாடு

மூக்கணாங்கயிறுக்கு தடைக்கோரி வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மூக்கணாங்கயிறுக்கு தடைக்கோரி வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா
மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மூக்கணாங்கயிறு போட அனுமதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு  போட அனுமதிப்பது மிருகவதை எனக்கூறி சென்னை அயனாவரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு  போடுவதால், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.
உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த, இந்த நடை முறை தான் பின்பற்றுவதாக தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என தெரிவித்து, இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை  8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.