தமிழ்நாடு

மாரிதாஸ் கைதை கண்டித்து போராடிய 50 பாஜகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

மாரிதாஸ் கைதை கண்டித்து போராடிய 50 பாஜகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நிவேதா ஜெகராஜா

யூ-டியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, டாக்டர் சரவணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 50 பேர் மீது மூன்று காவல் நிலையங்களில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் நேற்று யூடியூபர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக, காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாரிதாஸின் கைதை கண்டித்து மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள அவரது இல்லம், புதூர் காவல் நிலையம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு ஆகிய இந்த 3 பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பாலை, தல்லாகுளம் மற்றும் புதூர் ஆகிய 3 காவல் நிலையங்களில் இவ்வழக்குகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோதமாக செயல்பட்டது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொரோனா நோய் பரவல் உள்ள காலக்கட்டத்தில் ஆட்களை கூட்டி நோய் பரவும் அபாயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவையன்றி தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாரிதாஸை காவலில் எடுத்து விசாரிக்கவும் அவர் மீது உள்ள பழைய வழக்குகளை கண்டறிந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்யவும் மதுரை மாநகர காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர் எனத்  தெரிகிறது.