தமிழ்நாடு

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி -ஈரோட்டில் நிகழ்ந்த அதிரச்சி சம்பவம்

webteam

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு மோசடிகள் ஊழல்களை வெளிக் கொண்டுவந்த சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சிசெய்த லாரி உரிமையாளர், ஓட்டுநர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமறைவான இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(49) சமூக ஆர்வலரான இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கனிம வளம் கொள்ளை, வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளில் மனுக்களை தாக்கல் செய்து அங்கு நடைபெறும் முறைகேடுகளை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கேயம் நால்ரோடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். ஐவர் ராசாக்கோவில் பகுதி அருகே சென்றபோது, டிப்பர் லாரியில் வந்த இரு நபர்கள் செந்தில்குமாரின் கார்மீது லாரியைக் கொண்டு மோதியுள்ளனர். பின்னர் லாரியை பின்னோக்கி எடுத்துவந்து மீண்டும் ஏற்றியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை மீண்டும் சுத்தியல், ராடு உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் லாரி உரிமையாளரான முத்தூர் ராசாத்தா வலசை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் லாரி ஓட்டுநர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.