வாணியம்பாடி அருகே இடம் தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கிளை செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை புதிய காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஏகாம்பரம். அதேப் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ். இருவரும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மோகன் அவருக்கு சொந்தமான 2 அடி இடத்தை ஏகாம்பரம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மோகன்தாஸ் உறவினர்களான அதிமுக கிளை செயலாளர் வழக்கறிஞர் பாபு, அருள்தாஸ், ராமதாஸ் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் ஏகாம்பரம் மற்றும் அவருடைய குடும்பத்தினரான சுகுமார், கிருஷ்ணமூர்த்தி, கவிதா, ஆப்பிள் உள்ளிட்டோரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பலமாக தாக்கியுள்ளனர்.
இதனால், படுகாயமடைந்த ஏகாம்பரம் குடும்பத்தினரை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மோதலில் 7 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல் நிலைய போலீசார் இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.