school pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி: வீட்டுப்பாடம் செய்யவில்லை என மாணவனை அடித்த ஆசிரியை.. பாய்ந்தது வழக்கு!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பள்ளி மாணவனை கம்பால் தாக்கிய பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

webteam

தூத்துக்குடியின் களப்பான்குளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் கழுகுமலையில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி அப்பள்ளியை சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியை ரெமிலா, சந்தோஷ் படிக்கும் வகுப்பின் மாணவர்களிடம் வீட்டுப்பாட நோட்டை கேட்டுள்ளார். சந்தோஷ் உள்பட அனைத்து மாணவர்களும் வீட்டுப் பாடங்களை ஆசிரியையிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.

ஆசிரியை அடித்ததில் மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை

இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்றுவந்த பிறகு, மாணவன் சந்தோஷிடம் மீண்டும் வீட்டுப்பாட நோட்டை ரெமிலா கேட்டுள்ளார். அப்போது நோட் காணவில்லை என மாணவர் சந்தோஷ் கூறியதும், கோபமடைந்த ரெமிலா “வீட்டுப்பாடம் செய்யாமல் பொய் சொல்கிறாயா?” என மாணவரை கம்பால் தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் சந்தோஷின் அம்மா கவிதாவிற்கு, “உங்கள் மகன் வீட்டுப்பாடம் செய்யவில்லை” என செல்போனில் ஆசிரியை ரெமிலா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவனின் தாய் கவிதா பள்ளி நிர்வாகம், காவல் நிலையம், குழந்தைகள் நலத்துறை ஆகிய இடங்களில் புகார் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மாணவர் சந்தோஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் ஆசிரியை ரெமிலா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.