தமிழ்நாடு

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்: திருமா, சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்: திருமா, சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு

webteam

அனுமதியின்றி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர் சித்தார்த், இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் வந்து கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினர். இதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், நடிகர் சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.