செய்தியாளர்: சுப்பையா
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி - ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு ஊழியர்களும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில், முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் 2019-ம் ஆண்டு வெளியான தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி உள்ளார்.
அதை சுட்டிக்காட்டிய அவர், “அந்த அரசாணையில் ஃபார்மல் பேண்ட் - ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருகிறார்.
அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளது. ஆகவே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.
இதை கருத்தில்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.