Protest pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: பங்குதாரர்களுக்குத் தெரியாமல் நிறுவன சொத்துக்களை விற்று மோசடி - 8 பேர் மீது புகார்

திருவள்ளூரில் காட்டூர் திருமுல்லைவாயல் பெண்கள் சிப்காட்டில் செயல்படும் நிறுவனத்தின் சொத்துக்களை 51 பங்குதாரர்களுக்குத் தெரியாமல் விற்று மோசடி செய்ததாக 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல், காட்டூர் பகுதியில் பெண்களுக்கென்று தனியாக சிப்காட் செயல்பட்டு வருகிறது. இதில், 59 நபர்கள் மத்திய மாநில அரசின் உதவியுடன் அம்பத்தூர் டாப்சியா இன்ஜினியரிங் கன்சொடியம் லிமிடெட் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில், மத்திய அரசின் சலுகைகளோடு பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை கொள்முதல் செய்து 2013 ஆம் ஆண்டு முதல் தொழிலை துவங்கி நடத்தி வந்துள்ளனர்.

சொத்துக்களை விற்று மோசடி

இந்நிலையில், 59 நபர்களில் 8 நபர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தனர். இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இயந்திரங்கள் வாங்குவது, கடன் பெறுவது என பணிகளை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் இவர்கள் நிர்வாக குழுவினர், மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள நிறுவனத்தின் நிலம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன இயந்திரங்களை வெறும் 6 கோடி 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து நிர்வாகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய சிறு குறு நிறுவனங்கள் துறைக்கு புகார் அளித்துள்ளனர். அதனை தமிழக அரசின் சிறு குறு நிறுவன துறை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளனது. ஆனால் தமிழக அரசின் நிறுவனம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் முதல்வரின் தனிப்பிரிவு, காவல் ஆணையரகம், சிப்காட் நிர்வாகம் என அனைத்து இடத்திலும் புகார் அளித்தும் மோசடி குறித்து எந்த வித விசாரணையும் நடைபெறாமல் இருந்து வருகிறது. எனவே உடனடியாக தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.