மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், மதன், சிவக்குமார், நித்தியகுமார் ஆகிய நான்கு பேர் நேற்று முன்தினம் மதியம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்படித்து கொண்டிருந்தனர். அப்போது பைபர் படகில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி படகில் இருந்த ஐஸ் பாக்ஸ், ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன்பிடி வலைகள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த செந்தில்குமார், மதன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் மற்றோரு சம்பவத்தில் நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா வானவன்மகாகேவி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம், சிவக்குமார், முகுந்தன், கிருஷ்ணசாமி ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைபர் படகுகில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் படகை மறித்து மீனவர்களை தாக்கி படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட், வாக்கி டாக்கி, செல் பேட்டரி மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம்; கடலோர காவல்குழும காவல்துறையினர் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத இரு படகுகளில் வந்த 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 394 பிரிவின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்