எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ட்விட்டர்
தமிழ்நாடு

திரையிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்த விஜயகாந்த்.. பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா!

PT WEB

2005ஆம் ஆண்டு தேமுதிகவை மதுரையில் தொடங்கியபோது, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜயகாந்த் சென்றது எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில்தான்... விஜயராஜ் ஆக இருந்தவர், ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் விஜயகாந்தாக உருவெடுத்ததற்கு விதையாக இருந்ததும் எம்.ஜி.ஆர்.தான்...

அருப்புக்கோட்டையில் பிறந்து மதுரையில் வளர்ந்த விஜயகாந்திற்கு பிடித்தமான பொழுதுபோக்கு சினிமா. தனது நண்பர்களுடன் சேர்ந்து நாள்தோறும் எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த விஜயகாந்துக்கு, சென்னைக்கு சென்று சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையே அவரைப் பார்த்துதான் உருவாகியுள்ளது.

மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் உறுப்பினராக இருந்த விஜயகாந்த், கடினமான உழைப்பினாலும், திறமையினாலும் முன்னேறி திரையுலகில் புரட்சி கலைஞராக உயர்ந்தார். ஆரம்ப காலத்தில் பட வாய்ப்பிற்காக செல்லும் அவர், எம்.ஜி.ஆர். பட வசனங்களை பேசியே தனது திறமையை வெளிகாட்டியிருக்கிறார். தான் நடிக்கும் திரைப்படங்களில் தன்னை எம்.ஜி.ஆர். ரசிகனாகவே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டார் இந்த கருப்பு எம்.ஜி.ஆர். நடிகர் எம்ஜிஆர் நடித்த ’மதுரை வீரன்’ திரைப்படத்தின் தலைப்பு மிகவும் பிடித்துப்போனதால், அதே பாணியில் ‘மதுரை சூரன்’ படத்தில் நடித்தார் விஜயகாந்த். ’மெட்ராஸ் வாத்தியார்’ எனும் படத்தில் எம்.ஜி.ஆர். படம் போட்ட பனியன் அணிந்து விஜயகாந்த் நடித்தார். கட்சிக் கூட்டத்திலும் சரி, ரசிகராகவும் சரி எம்.ஜி.ஆரை தூரத்தில் இருந்து ரசித்த விஜயகாந்த், அவரை நடிகர் ராஜேஷின் இல்லத்திருமண விழாவின்போது சந்தித்துள்ளார். எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு அவரது மனைவி ஜானகியை பார்ப்பதற்காக அவ்வபோது குடும்பத்துடன் செல்லும் விஜயகாந்த், அவரிடம் இருந்துதான் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திய வேனை பரிசாக பெற்றிருக்கிறார்.

Live Updates

எம்.ஜி.ஆர். போலவே சினிமாவில் ரிஸ்க் எடுத்தவர், எம்.ஜி.ஆரைப் பின்தொடர்ந்து தன்னை நாடி வந்தவர்களின் பசியாற்றியவர், எம்.ஜி.ஆரைப் போன்றே பலருக்கும் உதவியவர், எம்.ஜி.ஆரைப் போலவே ஈழத்தமிழர்கள் மீது தீராப்பற்று கொண்டவர் என இந்த கருப்பு எம்.ஜி.ஆரின் மனித நேயத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம். தனது வாத்தியார் எம்.ஜி.ஆரை அனைத்து வழிகளிலும் பின்தொடர்ந்த விஜயகாந்த், இப்போது அவர் மறைந்த டிசம்பர் மாதத்திலேயே மண்ணுலகைவிட்டு மறைந்திருக்கிறார்.