உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் pt web
தமிழ்நாடு

பானிபூரியில் கேன்சரை உண்டாக்கும் காரணியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல் - தமிழகத்தில் அதிரடி சோதனை!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

PT WEB

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் பானிபூரி நீரில் புற்று நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டதால் தமிழகத்தில் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பானி பூரி

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பானி பூரி கடைகளிலும் சோதனை மேற்கொள்ளுங்கள் என உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது. அதை ஏரியா வாரியாக பிரித்துள்ளோம். இன்று அலுவலர்கள் அத்தனை பேரும் பானிபூரி கடைகளின் மாதிரிகளை சோதிக்கிறார்கள்.

கர்நாடகத்தில் எம்மாதிரியான சோதனைகள் மேற்கொண்டார்களோ அதேசோதனைகளை நாங்களும் மேற்கொள்ள இருக்கிறோம். அதில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளோ அல்லது ஆபத்தான பொருட்கள் ஏதும் இருந்தாலோ உரிமையாளர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பானிபூரி கடைகளில் சுகாதாரம் இல்லாமல், கைகளாலேயே உடைத்து அப்படியே அந்த நீரில் மூழ்கடித்து எடுத்துக் கொடுப்பார்கள். இது முற்றிலும் சுகாதாரமற்ற ஒரு செயல். தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள்தான் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிந்திதான் தெரிகிறது. தமிழ் தெரிவதில்லை. நீங்கள் நல்ல பானி பூரி சாப்பிட்டீர்கள் என்றால் சுறுசுறுப்பு வரும். ஆனால் சுகாதாரமற்ற முறையில் செய்வதை உட்கொண்டால் உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.

பானி பூரியில் உபயோகிக்கப்படும் பானியை ஒரு நாள் மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், அதை மறுநாளும் மக்களுக்கு சில கடைகளில் கொடுக்கின்றனர். அடுத்ததாக அதை தயாரிக்கும் முறை.. சாதாரண பானி பூரியில் பானி அவ்வளவு பச்சையாக இருக்காது; ஏனெனில் அதில் கொத்தமல்லி, புதினா தான் இருக்கும். ஆனால் சில கடைகளில் அந்த பச்சைக் கலருக்காக ஒரு டை கலப்பார்கள். என்னைப் பொருத்தவரை அந்த டை கூட கேன்சரை உண்டு பண்ணக்கூடிய காரணியாக இருக்கலாம்” என்றார்.