திரையுலகில் வெற்றி நடை போட்டு, உச்ச நட்சத்திரமாகி, ரசிகர்களின் மனதில் அரியணை ஏறிய நடிகர் விஜய், அரசியலிலும் தடம் பதிக்க முற்பட்டுள்ளார். அதற்காக அதிரடியாக ஓர் அறிக்கை மூலம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்து, கட்சியைத் தொடங்கினார். அண்மையில் சிவப்பு மஞ்சள் பின்னணியில், இரண்டு போர் யானைகள், வாகை மலர், 28 நட்சத்திரங்கள் என வண்ணமயமான கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். பரப்புரைப் பாடல் போல கொடிப்பாடலையும் வெளியிட்டார். கொடி வடிவமைக்கப்பட்டதன் சாராம்சத்தை விரைவில் விளக்குவதாக விஜய் கூறியிருந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஜய், தனக்கான செல்வாக்கை பறைசாற்ற அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாடு என்பதால், பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, விக்கிரவாண்டியை இறுதி செய்திருக்கிறார். அங்கு வி.சாலை என்ற இடத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்துவதென நாள் குறித்துள்ளார்.
இதற்காக 85 ஏக்கர் பரப்பளவை தேர்வு செய்துளளார். மாநாட்டுக்கான அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எஸ். பி. அலுவலகத்திலும் கடந்த 28 ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதே நாளில் ஏ.டி. எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே 5 ஏக்கர் நிலம், மாநாட்டுக்கு வந்து செல்ல 3 வழிகள், உணவு, குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்து தர திட்டமிட்டிருக்கிறார்கள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள். மாநாட்டுப் பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பும், தீயணைப்புத்துறையின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று கோரியுள்ளனர்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான அனுமதி எப்போது வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது பற்றி மாவட்ட காவல்துறை தான் முடிவெடுக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் முடிவெடுக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்” என தெரிவித்தார்.
மாநாட்டுக்கு தேர்வாகியுள்ள இடம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகிலேயே, 300 மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் என தெரிகிறது. ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை அருகே உளுந்தூர்பேட்டை - எறஞ்சி என்ற இடத்தில், தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடந்தபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போதும் இதே நிலை நேரிடக்கூடும் என்பதால், அனுமதி மறுக்கப்படலாம் என்று தெரிகிறது. மாநாட்டுக்காக தேர்வாகியுள்ள பகுதியில் சுமார் பத்து கிணறுகள் இருப்பதும் காவல்துறையின் தயக்கத்துக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. விஜய் விரும்பியபடி முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்குமா என்பது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கையில் தான் இருக்கிறது...