தமிழ்நாடு

ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா ? சரவணபவன் ராஜகோபோலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா ? சரவணபவன் ராஜகோபோலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

jagadeesh


ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய ராஜகோபாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவர், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேன்மையை அடையலாம் என ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2 மனைவிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ராஜகோபால். இதனிடையே பிரின்ஸ் சாந்தகுமார் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். அதை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிர்ச்சி அளித்தது. 

ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜூலை 7ஆம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனப்பட்டது. 

இந்நிலையில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இந்நிலையில் உடல்நிலைக் காரணமாக சரணடைவதில் இருந்து விளக்களிக்க வேண்டுமென்று ராஜகோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்து, உடனே சரணடைய உத்தரிவு பிறப்பத்தினர், மேலும் "ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா ? உடல் நிலையை காரணம் காட்டுவதாக இருந்தால் கடைசி நேரத்தில் ஏன் மனு தாக்கல் செய்கிறீர்கள் ? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்விகளை எழுப்பினர்.