தமிழ்நாடு

நிலவேம்பு விவகாரத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர்நீதிமன்றம்

நிலவேம்பு விவகாரத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர்நீதிமன்றம்

Rasus

நிலவேம்பு கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் கமல் மீது, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் மிக வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிலவேம்பு கசாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவியதால், ஆய்வு முடிவுகள் வரும் வரை நிலவேம்பு கசாயத்தை யாரும் விநியோகம் செய்ய வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக கமல் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த 19-ஆம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முதலமைச்சர், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா காரணத்தினால் தான் கமல் இந்த அவதூறுவை பரப்புவதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதனிடையே, தனது புகார் மீது காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேவராஜனின்  புகார் குறித்து விசாரிக்க வேண்டும். புகாரில் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலவேம்பு தொடர்பான கமலின் கருத்தை முதலில் காவல்துறையினர் ஆராய்வார்கள். அதுதொடர்பாக சித்த மருத்துவர்கள் மற்றும் தமிழக சுகாதாரத்துறையின் கருத்துகளை கேட்பார்கள். கமலின் கருத்து முரண்டாபாக இருக்கும் பட்சத்தில், முகாந்திரம் இருப்பதாக கருதப்பட்டு கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.