ராயபுரம் முகநூல்
தமிழ்நாடு

சென்னை | சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே, அசோக் என்ற இளைஞர் இன்று காலை 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே தொங்கி கொண்டிருந்த Wifi வயர்கள், அவ்வழியே சென்ற அந்த இளைஞரின் கழுத்தில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், இதை கண்ட அப்பகுதி போக்குவரத்து காவலர்கள் இளைஞரை ஒருபுறம் எச்சரித்துள்ளனர். ஆனால் அதற்குள் நிலை தடுமாறிய இளைஞர், அச்சமயம் அங்கு வந்துகொண்டிருந்த மாநகர பேருந்தின் முன் டயருக்கு அடியில் விழுந்துள்ளார். இதைக்கண்டு சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர், சட்டென பேருந்தை நிறுத்தவே, அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டுள்ளனர்.

இதனால், இளைஞர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் வேறெங்கல்லாம் இப்படி வயர்கள் தொங்கி கொண்டுள்ளது என்று சோதனை செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து அப்பகுதி போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை சாலைகளில் இப்படி அடிக்கடி வைஃப்பை ஒயர்கள் தொங்குவதும், இதனால் விபத்து ஏற்படுவதும் தொடர் கதை என்று அப்பகுதி மக்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். இதுபோல தொங்கும் கேபிள் ஒயர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திலும், மாநகராட்சி பிரிவிலும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆகவே இது அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.